இன்று இஸ்லாத்தின் நான்காம் கலீபாவும், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் பெரிய தந்தையின் மகனாரும், நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் மகளார் சுவனத்து பெண்களின் தலைவியாம் அன்னை பாத்திமா நாயகி ரழி.... அவர்களின் கணவரும், சுவனத்து இளைஞர்களின் தலைவர்களான இமாம் ஹசன் ரழி..., இமாம் ஹுசைன் ரழி... ஆகியோரின் தகப்பனாரும், சூபியாக்கள் எனப்படும் ஆன்மீக குருமார்களின் முதன்மை ஆசிரியரும், உலகத்தில் உள்ள சாதாத்மார்கள் எனப்படும் நபிகளாரின் வாரிசுகளின் பாட்டனாரும், மிகுதியான வலிமார்களின் பாட்டனாருமான ஹழ்ரத் அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களின் உரூஸ் தினம் ஆகும்.
இவர்கள் காபாவில் பிறந்தார்கள். முதலில் பார்த்தது நபிகளார் ஸல்... அவர்களை. பிறந்து மூன்று நாட்கள் கண் திறக்கவில்லை. நபிகளார் இவர்களை பார்க்க சென்ற போது கண்திறந்தார்கள். சிறு வயதிலேயே (7 அல்லது 9 வயது, அதாவது வயதிற்கு வருவதற்கு முன்னமே) இஸ்லாத்தை ஏற்று கொண்டார்கள். ஆரம்ப கால முதல் நபிகளாரின் தோழமை இவர்களை மிகவும் பண்படுத்தியது. ஏழ்மையான நிலையிலும் அல்லாஹ்வின் திருப்திக்காக வாழ்ந்தவர்கள். நபிகளார் இவர்களை புகழ்ந்து يحب الله ورسوله ويحبه الله ورسوله அதாவது இவர்களை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் பிரியப்படுகின்றனர், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இவர்களும் பிரியப்படுகின்றார் என்ற சோபன செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது. தங்களுடைய கஷ்ட ஜீவனத்திலும் எந்த காரியமும் அல்லாஹ்விற்காக செய்வார்கள்.
ஒரு முறை தங்களுடைய பிள்ளைகளின் காய்ச்சல் சரியாகிவிட்டால் மூன்று நாட்கள் நோன்பு நோற்கின்றோம் என்று ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களும் அன்னை பாத்திமா நாயகி ரழி... அவர்களும் நேர்ந்து இருந்தார்கள். அப்படியே நோன்பும் இருந்தார்கள். முதல் நாள் நோன்பு முடிந்தது. சாப்பிட அமர்ந்தார்கள், மிஸ்கீன் வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே இரண்டாம் நோன்பை நோற்றார்கள். இரண்டாம் நாள் நோன்பு முடிந்தது. சாப்பிட அமர்ந்தார்கள், அநாதை வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே மூன்றாம் நோன்பைநோற்றார்கள். மூன்றாம் நாள் நோன்பு முடிந்தது. சாப்பிட அமர்ந்தார்கள், கைதி வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே அடுத்த நாளின் ஏனைய காரியங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். அல்லாஹ் இவர்களை புகந்து சூரா தஹர் இறக்கி வைத்துள்ளான். அதில் இந்த சம்பவத்தின் வசனத்தையும் இறக்கியுள்ளான்.
அவனுடைய (அல்லாஹ்வுடைய) பிரியத்தில் ஏழைக்கும், அனாதைக்கும், கைதிக்கும் உணவளிப்பார்கள், அப்படி உணவளித்து விட்டு நாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான் வழங்கினோம் என்று கூறுவார்கள். (76: 8,9)
ஆரம்ப காலம் முதல் கடைசி காலம் வரை நபிகளார் ஸல்... அவர்களுடனே இருந்து தபூக் தவிர அனைத்து போர்களிலும் பங்கேற்றார்கள். இவர்களின் தலைமையில் அனைத்து போர்களிலும் வெற்றி கிடைத்தது. பத்ரு போரில் 20 களில் வயது இருப்பினும் முஹாஜிரீன்களின் கொடி இவர்களிடம் தான் இருந்தது. வலீத் உட்பட பல காபிர்களை இஸ்லாத்திற்காக வீழ்த்தினார்கள். உஹதில் இவர்கள் காட்டிய வீரத்தால் எதிரிகள் சிதருண்டார்கள். அகழ் போரில் நடந்த ஒரே யுத்தத்தில் அமர் என்ற வீரமிகு எதிரியை, இஸ்லாத்திற்காக உயிரை பணயம் வைத்து அவனோடு போர் புரிந்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள்.
கைபர் யுத்தத்தில் மூன்று நாட்கள் போர் புரிந்தும் கிடைக்காத வெற்றி, நாளை ஒரு இளைஞன் யிடம் கொடியை தரப்போகின்றேன், அவரை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் பிரியப்படுகின்றனர், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இவர்களும் பிரியப்படுகின்றார் என்றும் கூறி அவரின் கையில் வெற்றி கிடைக்கப் போகிறது என்ற சோபனமும் கூறினார்கள் (புகாரி) அப்படியே வெற்றி கிடைத்தது. அங்கு நடந்த ஒரு சம்பவம் மூலம் எப்படி இவர்கள் இஸ்லாத்திற்காக போர் புரிந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
ِ
ஒரு எதிரியை தாக்க வாள் தூக்கி கொண்டு போக, அவன் இவர்கள் மீது துப்பி விடுகின்றான். இயல்பாக கோபம் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அலீ ரழி... அவர்களோ அவனை விட்டு முகத்தை திருப்பி கொண்டார்கள். அவனுக்கு ஆச்சரியமாக போக என்ன என்று விசாரிக்கின்றார். நான் அல்லாஹ்விற்காக வாள் ஓங்கினேன். நீ துப்பி விட்டதால் பகைமை நமக்குள் வந்துவிட்டது. அதனால் அல்லாஹ்விற்காக மற்றொரு முறை உன்னை பார்த்து கொள்வேன் என்று கூற அந்த யூதர் இஸ்லாம் ஆனார்.
அல்லாஹ்விற்காக செய்த அதன் ஒரு காரியத்தில் அவருடைய சந்ததிகளுக்கு இஸ்லாம் கிடைத்தது என்று பெருமக்கள் கூறுவார்கள். அதே கைபரில் கடைசி கோட்டையில் மிர்ஹப் உடைய கிரீடத்தை உடைத்தார்கள். அதில் இருந்த நவரத்தினங்களை போரில் கிடைத்த பொருள் (கனீமத்) ஆக சஹாபாக்கள் எடுக்க, அலீ ரழி... அவர்களையும் எடுக்க சொன்ன பொது நான் உடைத்தது அல்லாஹ்விற்காக, நான் இதை எடுத்து விட்டால் அல்லாஹ் நீ சுயநலத்திற்கு உடைத்தாய் என்று கூறி விட்டால் என்ன செய்வேன் அதனால் எடுக்க மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.
இவர்களுடைய பெருமைகள் சொல்லி முடியாது. தபூக் யுத்ததிற்கு ஹழ்ரத் அலீ ரழி... அவர்களை நபிகளார் வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். அழுது கொண்டு சென்றார்கள் நபிகளாரிடம், யா ரசூலுல்லாஹ் ஸல்... நான் என்ன தவறு செய்தேன் இல்லை போர் புரிய தகுதியை இழந்து விட்டேனா என்று கேட்க இல்லை, உங்களை மூஸா அலை... அவர்கள் ஹாரூன் அலை... அவர்களை விட்டு சென்றதை போல் நான் விட்டு செல்கின்றேன், எனினும் எனக்கு பிறகு நபி இல்லை.(நபி இருந்து இருந்தால் நீங்கள் தான் நபி)
நபிகளாரை குளிப்பாட்டி கப்ரில் அடக்கம் செய்ததும் இவர்கள் தான்.
இவர்களின் அல்லாஹ்வின் பயத்தால் இரவில் நின்று அழுதவர்களாக இருப்பார்கள். போரில் புன்முறுவல் பூத்தவர்களாக செல்வார்கள். இதை பற்றி ஒரு கவிஞர் சொல்லும் போது هو البكاء فى المحراب ليلا - هو الضحاك في يوم الضراب அதாவது, இவர்கள் இரவில் மிஹ்ராபில் (தொழுகையில்) அழுவார்கள், போரிலே சிரித்தவர்களாக செல்வார்கள்(கடினத்தை முகத்தில் காட்டமாட்டார்கள்)
இவர்களை பற்றி
அலீயே நீர் என்னிலிருந்தும் நான் உம்மிலிருந்தும் இருக்கின்றோம் என்றும்,
நீர் இந்த உலகிலும் மறு உலகிலும் என்னுடைய சகோதரராக இருக்கின்றீர் என்றும்,
நான் அறிவின் பட்டணம், அலீ அதன் நுழைவாயில்
என்றும் நபிகளார் ஸல்... அவர்கள் கூறியுள்ளார்கள்.
கணிதத்தில் மிகவும் உயரத்தில் இருந்தார்கள். தப்சீர் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்று இருந்தார்கள். தப்சீர் கலையில் தலைவராக கருதப்படும் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி... அவர்கள், ஹழ்ரத் அலீ ரழி... அவர்களிடம் பாடம் பயின்றார்கள். ஹழ்ரத் அலீ ரழி... அவர்கள் கூறுகின்றார்கள், குர்'ஆன் எங்கு, எப்போது, எதற்கு, யாருக்கு, இறங்கியது என்ற ஞானம் எனக்கு உள்ளது போல் சஹாபா பெருமக்களில் வேறு ஒருவருக்கு இல்லை என்று கூறிஉள்ளார்கள்.
ஏனைய கலீபாக்களின் ஆட்சிகளின் போது அவர்களுடனே இருந்து மார்க்கப் பிரச்சனைகளில் தீர்வு கண்டார்கள். நஹு சட்டம், வாரிசு உரிமை சட்டங்களின் தலைமை ஆசிரியராக விளங்கினார்கள். இவர்களின் ஆட்சி 4 1/2 ஆண்டுகள் நடந்தது. ஒரு நாளும் நிம்மதியாக இருக்கவில்லை. கலீபாவாக இருப்பினும் ஏழ்மையை தேர்ந்தெடுத்தார்கள். தலை சிறந்த நிர்வாகியாக இருந்தாலும் நீதத்தில் (واقضاهم علي) நபிகளார் கூறியதை போல் நீதி வானாக இருந்தார்கள். உமையாக்களின் அட்டூழியத்தால் ஹிஜ்ரி 40 இல் பள்ளிவாசலில் வைத்து ஷஹீதாக்கப்பட்டார்கள்.
அல்லாஹ் நம்மவர்களின் பிழையை இப்புனிதர்களின் பொருட்டால் மன்னித்தருள்வானாக. நம்முடைய நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி அருள்வானாக. நம்முடைய அமல்களை ஏற்றுக்கொள்வானாக. ஆமீன்! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்.
அபூத் தைய்யார்
குறிப்பு: இவர்களுடைய சிறப்பை பற்றிய பயான் இன்று மதுரை காஜிமார் பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.